தூக்கம் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அந்த தூக்கம் சிலருக்கு சுலபமாய் கிடைப்பதில்லை. நானும் பல தூக்கம் வராத இரவுகளை கடந்திருக்கிறேன். இன்னும் தூக்கம் வராத இரவுகள் எத்தனை இருக்கிறதோ..
இப்போதாவது பரவாயில்லை, நட்பும் காதலும் வெற்றியும் தோல்வியும் குழப்பமாய் இருந்த நாட்களில் நான் தூக்கத்தை புரிய முயற்சித்து தோல்வியடைந்தேன். அதற்கு முன்பு எங்க வீட்டில் எங்க அப்பாதான் என்னோட தூக்கத்தின் முதல் எதிரி. குடிக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கும் அம்மாவுக்கும் இரவு அவர் வீடு வந்து சேரும் வரை தூக்கம் வராது. விடிய விடிய முழித்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அதே போல பத்தாவது படிக்கும் போதிலிருந்து தேர்வு நாட்களிலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. எந்த தேர்வுக்கும் நான் முழுமையாக படித்ததில்லை அப்புறம் எப்படி தூக்கம் வரும். ரெண்டு நாள் படிப்பு மிச்சம் இருக்கும் ஒவ்வொரு தேர்வின் முதல் நாள் இரவிலும். ஆனாலும் அவற்றையெல்லாம் காலையில் சீக்கிரமெழுந்து படித்து விடலாமென அசாத்திய தைரியத்தோடு படுத்துவிடுவேன். ஆனாலும் அந்த தைரியம் ஏனோ என்னுடைய தூக்கத்துக்கு வராது. நாலு மணி அலாரத்துக்கு ஒரு மணியிலிருந்து 5 தடவ முழிச்சு முழிச்சு பாத்து சரியா நாலு மணிக்கு தூங்கி போயிருவேன். படுத்தவுடன் தூங்கும் சில நண்பர்களைப் பார்க்கும் போது பொறமையாகத்தான் இருக்கும். துபாயில் இருந்த நாட்களில் சக்தி FM ஐ காதிற்குள் நுழைத்தபடியே தூங்கி போயிருக்கிறேன்.
அதே போல தூங்கியே துன்பப்படுபவர்களும் உண்டு. பள்ளிகாலத்தில் ஜெயக்குமார் என்ற தோழன் எப்போதும் உட்காந்து கொண்டே தூங்குவான், அவனை தூங்கு மூஞ்சி என்றே அப்போது கூப்பிடுவோம். அவன் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையென்றால் எதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும், உட்காரச்சொல்லி பேசாமல் இருக்கச்சொன்னால் இரண்டு நிமிடத்தில் தூங்கிவிடுவான். தூக்கமென்றால் ஆழ்ந்த தூக்கமல்ல, எங்க ஊர் பக்கம் அதை கோழித்தூக்கம் என்பர், தூங்கிக் கொண்டே தலை கவிழ்ந்து பின் சடக்கென்று நிமிர்ந்து திருதிருப்பர். பாடம் நடத்துகையில் அவனை பக்கத்தில் இருப்பவர்கள் தொடையில் அடிக்கடி தட்டிக்கொன்டு இருப்பர்.அவனை ஆசிரியர்கள் எவ்வளவோ அடித்தும் அவன் தூங்குவதை மட்டும் விடவில்லை. ஒரிமுறை அவன் தூங்கிக் கொண்டு ஆசிரியரின் காலில் முட்டியிருக்கிறான் (அவன் தூங்குவானென தெரிந்துதான் ஆசிரியர் அவனை அருகில் வந்து அமர்ந்து கவனிக்கச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் சத்ததையும் மீறி அவன் தூங்கி விழுவான்) பிறகு தான் தெரிந்தது அது ஒருவகை நோய் என மருத்துவ சான்றிதழ் கொண்டுவந்து அவனுடைய அப்பா பள்ளியில் கொடுத்தார். அதன் பின்பு ஆசிரியர்கள் அவனை அடிப்பதை விட்டனர். பக்கத்தில் இருப்பவனுக்கு வேலை வந்தது, அவனை தட்டி எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
அதே போலத்தான் எங்க பாட்டி காலை நீட்டி உக்காந்து கொண்டே தூங்குவார். எங்க 'அம்மா உக்காந்துகிட்டே தூங்கினா வீட்டுக்கு ஆகாது போய் படுத்து தூங்குங்க'னு சொன்னா பாட்டிக்கு கோவம் வந்துரும். 'நா என்ன இழுத்துக்கிட்டா கெடக்கேன், போய் படுக்குறதுக்கு, நா ஒண்ணும் தூங்கல..' அப்படினு சொல்லிக்கிட்டே 2 நிமிசத்தில் தூங்கி விழுவார். கடைசி நாள்வரை பாட்டி ஒத்துக் கொண்டதே இல்லை தான் உக்காந்து கொண்டே தூங்குவதை, அதே போல் பகல் பொழுதில் உடல் நிலைசரியில்லை என்றால் கூட படுத்து நான் பார்த்ததும் இல்லை. பாட்டியை பொருத்தவரை வேலையிருக்கோ இல்லையோ எல்லாரும் தூங்கியபின் தான் தூங்கி, எல்லாருக்கும் முன் எழுந்து விடுவார். இப்போ எங்க அம்மா காலம், காலையில் பேப்பர் படித்துக் கொண்டோ, வாரமலர் படித்துகொண்டோ அப்படியே தூங்கிவிடுகிறார். ஆனால் TV பார்த்துக் கொண்டே தூங்குவது இல்லை. அது அப்பா, செய்தி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவார், அவர் தூங்கிட்டாரேனு நாம சேனல் மாத்தினால் முழித்துவிடுவார், 'ஏண்டா செய்திய மாத்துற, கேட்கணுமில'னு கத்துவார்.
இப்படி தூங்குபவர்கள் ஒருபுறமிருந்தாலும், என்னைப் போல படுத்ததும் தூக்கம் வராதவர்கள் என்ன செய்வது? அந்த நேரங்களில் இளைய ராஜாவை காதிற்குள் இசைக்கச் சொல்லி கேட்பது ஒரு தனிசுகம். மொட்டை மாடியில் தெளிந்த வானம் பார்த்து தூக்கம் வராமல் படுத்திருப்பதும் ஒரு சுகம். தனிமையை விரும்புபவர்கள் அதை மிகவும் ரசிக்க முடியும். கல்கி, பொன்னியின் செல்வனில் பூங்குழலி தனிமையை ரசிப்பதை அழகாக சொல்லியிருப்பார். இன்றைய வாழ்வில் தனிமை சாத்தியப்படுவது, படுத்த பின் தூங்கும் முன் இருக்கும் இடைப்பட்ட நேரம்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அன்றைய நாளை அசை போட்டவாறே அடுத்த நாளின் நடவடிக்கைகளை வரிசைப்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
"...
இரையும் சந்தை
அலறும் ரயில்
பதறும் வாகனம்
உயிர்வாங்கும் ஒலிவாங்கி
விஞ்ஞானப் பொய்சொல்லும் விளம்பரங்கள்..
அத்தனை லெளகீக சப்தங்களும்
சிறுகச் சிறுகத் தேய்ந்தடங்க
கேளாத சப்தங்கள்
கேட்குமிந்த இரவில்
பூமிக்குள் வேர்கள்
நீர்குடிக்கும் ஒலியும்
பிறைநிலா வளரும் மெல்லிய ஓசையும்
நிழல்கள் அசையும் நிசப்த சத்தமும்
இன்றுதான் கேட்கிறேன்
முதன் முதலாக
..."
- வைரமுத்து
(ஒரு தூக்குக் கைதியின்
கடைசி இரவு)
.
Tuesday, June 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//இரவு நேரங்களில் இளைய ராஜாவை கேட்பது ஒரு தனிசுகம். மொட்டை மாடியில் தெளிந்த வானம் பார்த்து தூக்கம் வராமல் படுத்திருப்பதும் ஒரு சுகம்//
அழகான வார்த்தைகள்.. உண்மையில் நானும் பல நேரங்களில் இப்பிடிதான்...!!!
நல்ல பதிவு கணேஷ்....
தொடருங்கள்
//அந்த தூக்கம் சிலருக்கு சுலபமாய் கிடைப்பதில்லை//
நானும் உங்கள் ரகம் :-)
@கண்ணா,
@ஐந்தினை,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
உறக்கம் இன்னும் மருத்துவத்திற்கே புரியாத புதிர்.அதை மிகச் சரியாக ஆய்வு செய்து பயன் பெற்றவர்கள் நம் நாட்டு ஞானிகள்,கணேஷ்.
நல்ல எழுத்து நடைஉங்களிடம் உள்ளது.. மேலும் இது போல நல்ல பதிவுகளை எழுதுக..
தூக்கத்தைப்பற்றிய நல்ல பதிவு கணெஷ். தூக்கதிற்காக ஏங்கும் சிலரில் நானும் ஒருவன்,
நன்றி ஷண்முகப்ரியன் சார்,
//மருத்துவத்திற்கே புரியாத புதிர்//
நிஜம்தான்.. தூங்கி விழிப்பதே புதுஜென்மம்தான்..
நன்றி ராசகுமாரன் (குறை ஒன்றும் இல்லை),
//நல்ல பதிவுகளை எழுதுக..//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்..
நன்றி ஆ.ஞானசேகரன்,
//தூக்கதிற்காக ஏங்கும் சிலரில் நானும் ஒருவன்//
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததாக கவியரசர் சொல்கிறார்..
நல்லதொரு பதிவு.
உங்களை போன்றதே எனது அனுபவங்களும்.
ஏதாவது சொந்த காரியமோ,அலுவலக வேலையோ முடிக்கும் வரை தூக்கமே வராது.
நானும் துபாயில் விடிய விடிய தூக்கம் வராமல் தொலைக்காட்சி பார்த்து பல இரவுகளை கழித்து இருக்கிறேன்.
தூக்கம் வராத நேரத்தில் யோசிப்பவற்றை எழுதும் பழக்கத்தை ஆரம்பித்து அதுவே இப்போது தூக்கமின்மைக்கு காரணம் ஆகிவிட்டது.
எனது அம்மா தொலைக்காட்சி தொடர்களை பார்த்து
கொண்டே தூங்கிவிடுவார்.நான் சத்தமில்லாமல் தொலைக்காட்சியை நிறுத்த முயற்சிப்பேன்.உடனே விழித்துகொண்டு கோபப்படுவார்.
அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
naan ungala follow pannuren aana enakku ethuvum update aagulaye yen..
இன்னும் எழுதுங்க
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
@துபாய் ராஜா,
@இது நம்ம ஆளு,
@வினோத் கெளதம்,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்..
வினோத் நீங்க follow பண்ணியது பழைய தொலைந்த பிளாக்கா இருக்கும்னு நினைக்கிறேன்.
பின்தொடர்தலுக்கு நன்றி..
இரவில் அமெரிக்கனாக பகலில் ஐரோப்பியனாக வாழ்ந்து கொண்டுருக்கும் நான் பதிவு உலகத்திற்கு வந்தே மூன்று மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆற்காட்டார் புண்ணியத்தில் இந்த கடிதம் கூட சற்று தாமதமாகத்தான் வருகின்றது. அதற்குள் அவசரப்பட்டு விட்டீர்களே. புதியவர் எவர் உள்ளே வந்தாலும் பதில் இடுவதற்கு முன் அவர்களின் பங்களிப்பை பார்த்த பிறகு வார்த்தைகளை தேர்ந்தெடுப்பேன். கவர்ந்த விஷயங்கள் இருந்தால் வரிசையில் சேர்த்துக் கொள்வேன். நீங்களே அடுத்த முறை உள்ளே வரவிட்டாலும் கூட ஓய்வு நேரத்தில் உலா வந்து விடுவேன். வரிசையில் இருக்கும் உங்கள் இடுகைக்கு நன்றி. இந்திய நாகரித்தையும், நாற்றத்தையும் எழுதுபவன், வீட்டுக்குள் வந்த விருந்தினரை நாகரிகமற்ற வார்த்தைகளால் வரவேற்பேன் என்று எப்படி உங்கள் எண்ணத்தில் வந்தது?
என்னை விட சற்று பதிவு உலகம் உங்களுக்கு அதிகமான அனுபவம் இருக்கிறது என்பதை மொத்தமாய் பார்த்த போது புரிந்து கொண்டேன். எனக்கு இது புரியவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. கருத்துக்கள் அத்தனையுமே ஒரு கண்ணிய வட்டத்திற்குள் வருகிறது. உங்கள் அப்பா மூலம் பெற்ற அனுபவம் போல் எனக்கு உண்டு. அது காரைக்குடிக்கே உரித்தான் சாப்பாடு?
ஒரு டயரி வாசிக்கும் அனுபவம். அதனால் அனுபவித்த உங்கள் வாசிப்பு அனுபவத்தில் வந்த வார்த்தைகளை பார்த்து தான் உங்கள் இடுகை அனுபவத்தை பார்த்து தான் ஒரே வார்த்தையில் பதில் அளித்தேன்.
காரணம் தொடக்க இடுகையை வாசித்த பார்த்தால் புரியும். அதிக திருப்பூர் அனுபவத்தால் எல்லாமே பெரிதாய் வந்ததை இப்போது தான் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக்கொண்டுருக்கிறேன். அதையே பதிலும்.
வாழ்த்துக்கள். வாருங்கள்.
நட்பை பெறுவதில் நிதானமாய் இரு, பெற்றபின் உறுதியாய் இரு
நட்புடன்
தேவியர் இல்லம். திருப்பூர்.
Post a Comment