Saturday, May 30, 2009

32 கேள்வி பதில்கள் - தொடர் பதிவு


இந்த தொடர்பதிவை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், எனக்கு தொடர வாய்ப்பளித்த நண்பர்கள் லோகு, கண்ணா வுக்கும் நன்றிகள்...

1.
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வீட்டுல அப்பா,அம்மா,பாட்டி,அத்தை எல்லாம் கூடிப்பேசி 'செந்தில்கணேஷ்'னு பேர்வைக்கலம்னு முடிவு பண்ணி கோயிலுக்கு போயாச்சு. ஆனா அங்க போயி அய்யர் அர்ச்சனை பண்ணும் போது பேரு என்னனு கேட்க அப்பாவுக்கு பேர் மறந்து போச்சு. கொஞ்சநேரம் யோசிச்சுட்டு கணேஷ்குமார்னு சொல்லிட்டார். அய்யரும் கணேஷ்குமாருங்குற பேருல அர்ச்சனை பண்ணிட்டார். அப்புறம் அதே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டாங்க.

என்னோட பேரு பிடிக்கும் (சுத்தமான தமிழ் பேரு வச்சுருக்கலாம்னு முன்னாடி நினச்சுருக்கேன்)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நினைவில்லை. ( கல்யாணம் பண்ணாததுதான் காரணம்னு நினைக்குறேன்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும், ஆனா மத்தவுங்களுக்கு என் கையெழுத்து பிடிக்கவே பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தமிழ்நாட்டு சமையல் எதுனாலும் சரி தான்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுல நான் கொஞ்சம் ஸ்லோ தான். நட்பு வட்டம் குறைவுதான். நண்பர்களை விரும்புவேன் ஏனோ பெரும்பாலான நட்பை நானாக ஆரம்பித்ததில்லை ...
(நட்பை பெறுவதில் நிதானமாய் இரு, பெற்றபின் உறுதியாய் இரு..- எங்கயோ எப்பவோ படித்தது..)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில் குளிக்குறதுதான் ஆனந்தம்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தைதான்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் : எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பா இருக்கனும்னு நினைக்குறது
பிடிக்காத விஷயம்: எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பு காட்ட முடியாதது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த/பிடிக்காத விசயம் ரெண்டும் ஒரே விசயம் தான். அது இன்னமும் அவுங்கள அடையாளம் காட்டாம கண்ணாமூச்சி ஆடுறதுதான்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
முத்து - பள்ளித்தோழன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட், பிஸ்கட் கலர் டீசர்ட் (இந்த கேள்வி இருக்குனு தெரிஞ்சே இந்த டிரஸ்ஸ போட்டேனாக்கும்)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் சத்தத்தை கேட்டுக்கிட்டே தட்டுறேன்..
பாக்குறது சிஸ்டம் மானிட்டரத்தான்..( ஐயோ.. அடிக்க வராதிங்க)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்..

14.பிடித்த மணம்?
செண்பகப்பூ மணம்: கல்லூரி விடுதியிலிருந்து தொடர்ந்து வரும் மணம்
மண் வாசனை: மழை கால பரிசு
பிஸ்கட் வாசனை: சின்ன வயசுத் தேடல்(?)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அப்பாவி முரு: உண்மைய உரக்க சொல்லும் இவரது நேர்மையும், தொனியும் எனக்கு பிடிச்சது. அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

வெங்கி ராஜா: இவரோட எழுத்துக்களைப் பாத்தா வியப்பாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

ஜெகதீசன்: கல்லுரித் தோழர்.. யதார்த்தமா எழுதுற இவர் நான் பதிவெழுத ஒரு முக்கிய காரணம். இவரை அழைக்க காரணம் இவர் யாரை அழைக்கிறார்னு தெரிஞ்சுக்க தான்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
லோகு: அழகிய தமிழ் மகன் இவன் - விஜய் ரசிகனாய் இருந்தாலும் இந்தப் பதிவு என்னை ரசிக்கவே வைத்தது ( கார்க்கி மன்னிக்க ;) )

கண்ணா: உறங்காத விழியில் இறக்காத கனவுகள்

17. பிடித்த விளையாட்டு?
ரம்மி ( ராஜா ராணி ஜாக்கி.. வாழ்வில் என்ன பாக்கி..)

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.. சின்ன வயசில கண்ணாடி போடனும்னு ஆசை இருந்தது.. இப்போ டாக்டர் கண்ணாடி போட சொல்லி 3 மாசம் ஆகுது.. இன்னும் போடல.. சீக்கிரமே போடுவேன்..

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவையான படம் (அதுக்காக பிளேடு போடக்கூடாது)

20.கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம்..(தெரியாத்தனமா பாத்துட்டேங்க என்ன பண்றது.. விதி வலியது :(

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( பத்து நாளா இந்த புத்தகம் இருக்கு.. இப்போ எல்லாம் முன்ன மாதிரி படிக்க முடியல.. வயசாகுதோ.. கடவுளே..)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போவாது சிஸ்டத்துல எந்த வேலையும் இல்லாம போரடிச்சா எதாவது இயற்கை காட்சியா கூகிளாண்டவர்கிட்ட தேடி போடுவேன்..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: பக்கத்து வீட்டு பாட்டுச்சத்தம்
பிடிக்காத சத்தம்: ஹாரன் சத்தம் தான்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமீரகம்..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அததான் பாஸ் நானும் தேடிட்டு இருக்கேன்..(இருந்தாதான கிடைக்குறதுக்கு)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மத்தவங்கள மட்டம் தட்டுறத என்னால ஏத்துகவே முடிந்ததில்லை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம்கூட கவலைபடாதது...

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
சதுர கிரி - திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற ஒரு மலைக்கோவில். நல்ல இடம். இயற்கை காட்சிகளைப் பாத்தாலே மனசெல்லாம் நெறஞ்சுரும். அடிக்கடி போக தூண்டும் இடம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நாலு பேரு மதிக்கிறாப்புல..

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதயெல்லாம் தான் நான் இப்போ பண்ணிட்டு இருக்கேன்..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நம்பிக்கை..

Wednesday, May 27, 2009

பார்வைகள்..

அந்த பையனுக்கு 13 இல்ல 14 வயசு இருக்கும், எல்லாரோட பார்வையும் அவன் மேலயும் அவுங்க அம்மாமேலயும் தான். அவன் அவுங்க அம்மாவ 'சும்மா இரும்மா.. விடும்மா..எல்லாரும் பாக்குறாங்க..'னு சொல்லிகிட்டே கைய பிடிச்சுகிட்டு இழுத்துகிட்டு இருந்தான். கருப்பா குட்டையா தலையில் போட்ட ஒத்தை கொண்டையோடு ஒடிந்துவிடும் உடல்வாகு அந்த அம்மாவுக்கு. அந்த அம்மாவோ விடுற மாதிரி தெரியல. எப்டி விட முடியும்? அந்த அம்மாவோட புருசன் குடிச்சுட்டு வந்து அந்த அம்மாவ கெட்ட வார்ததைல திட்டிகிட்டு இருந்தான்.

'ஏண்டி..கண்டவன் கூட போய் படுத்து தே***யா தனமா பண்ணிட்டு இருக்க.. அவன வீட்டுல வச்சுகிட்டு கூத்தடிச்சுட்டு இருக்குற.. உன்னையும் அவனையும் கண்டதுண்டமா வெட்டிட்டுதாண்டி மறு வேல...'
அதுக்கு மேல அவன் சொன்னது எல்லாம் இங்க சொல்ல முடியாத வார்த்தைகள்..

கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பாத்த அந்த அம்மாவால தாங்க முடியாமத்தான் கத்தினாள்.
'ஆமாண்டா அப்படித்தான் அவன் கூட படுப்பேன். உனக்கென்ன? ரெண்டு பச்ச புள்ளைங்கள என்கூட தனியா விட்டுட்டு கூடி கூத்தியானு சுத்திகிட்டு இருந்த! என்னையும் எம்புள்ளைகளையும் அடிச்சது பத்தாதுனு ஊருல இருக்குறவன யெல்லாம் அடிச்சுட்டு ஜெயில்ல வருசம் ஆறுமாசம் குடியிருப்ப.. பிள்ளைகள பட்டினியா போட்டுட்டு நீ வப்பாட்டி வீட்டுல குடியிருப்ப..

இப்போ அவ புருசன பக்கதுல இருந்த ஆளுங்கயெல்லாம் பிடிச்சு போக சொல்லிகிட்டு இருந்தாங்க..
..த்தா என்ன திமிரா பேசுறா பாரு.. புருசங்கிற மரியாத இருக்கா.. உன்னையெல்லாம் ரெண்டா வகுந்து கருவறுக்கணுன்டி...கண்டா****.

'அறுப்படா அறுப்ப.. பொட்டப்பயலே.. கட்டுன பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் கஞ்சி ஊத்தாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா.. உன் கண்ணு முன்னாடியே அவன்கூட படுப்பேன்டா.. உன்னால என்னடா பண்ண முடியும் பொட்டப் பயலே..'

நல்ல வேளையா அப்போ திருநெல்வேலி பஸ் வந்தது. என்னோட பெரிய பேக்கோட நான் எறினேன். அந்த பையனும் அம்மாவும் ஏறினாங்க. வேற யாரும் ஏறல.. அந்த அம்மா ஜன்னலோரமா சேல தலப்பால வாய பொத்திகிட்டு மௌனமா எங்கியோ பாத்துகிட்டு அழுதுட்டு இருந்துச்சு.

அந்த பையன் தான் டிக்கெட் வங்கினான். 'ரெண்டு திண்னவேலி' வாங்கிட்டு திரும்பும் போது என்னைப்பாத்த பார்வை இருக்குதே..அவமானத்தால் கூனி குறுகி போன அந்த அலட்சியபடுத்த முடியாத பார்வை... ஏண்டா அவுங்கள பாத்தோமுனு என் மேலயே எனக்கு கோவம் வந்துச்சு.

கண்டக்டர் வந்தார்,' எங்க போகணும்?' என்கிட்ட கேட்டார். 'தம்பி, கள்ளிப்பட்டி வந்துருச்சா, வந்தா என்ன மறக்காம எறக்கி விட்டுருப்பா..' இது பக்கத்தில் இருந்த பெரியவர். ' மூட்ட முடிச்செல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கோ.. கள்ளிப்பட்டி வரப்போகுது, ஆமா நீங்க எங்க போகணு சார்'

'கள்ளிப்பட்டி ஒண்ணு'

'யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க.. கள்ளிப்பட்டி போணுன்னா டவுன் பஸ்ல ஏறவேண்டிதான.. திருநவேலி போற ரூட் பஸ்ல ஏறி உயிர வாங்குறீங்க.. கள்ளிப்பட்டிக்கெல்லாம் டிக்கெட் போட முடியாது..'

'சார் எனக்கு கள்ளிப்பட்டிதான் இறங்கணும்!.. அதான் இந்த தாத்தா எறங்குறார்ல நானும் எறங்கிக்குறேன்'

'நீ கள்ளிப்பட்டி எறங்குனாலுஞ்சரி இங்கயே எறங்குனாலுஞ்சரி விருதுநகர் டிக்கெட்தான் போடுவேன்'

டிக்கெட் வாங்கும் போது அந்த பையன் திரும்பிப்பாத்தான். அவன் முகத்துல சின்ன நிம்மதி..

கள்ளிப்பட்டி பஸ்ஸ்டாண்டுல இருந்த ஒரே ஒரு ஆட்டோக்காரன் வந்து என்னோட பெரிய பேக்க எடுத்துகிட்டு 'யார் வீட்டுக்கு சார் போணும்'

'திருநவேலி போணும்'

ஆட்டோக்காரன் ஒரு தினுசா பாத்துக்கிட்டு 'இங்க திருநவேலி பஸ் நிக்காது சார், வேணுன்னா எதுத்த மாரி நில்லுங்க.. டவுன்பஸ் வரும்.. திருமங்கலம் போய் அங்க இருந்து திருநவேலி பஸ்ஸ பிடிங்க'

திருமங்கலம் டவுன்பஸ்சுக்காக நின்னுகிட்டு இருக்கேன். ரோட்டுக்கு அந்த பக்க டீக்கடெலருந்து அந்த பஸ்ல வந்த பெரியவர் என்ன உத்து பாத்துகிட்டே டீ குடிச்சுகிட்டு இருக்கார். இந்த பார்வையை அலட்சியபடுத்த முடிந்தது..

..

Monday, May 25, 2009

தலைவரும் மீன்வலையும்

இலங்கை போர் நிறுத்ததிற்க்காக ஆறு மணிநேர திடீர் உண்ணாவிரதமிருந்தார் திமுக தலைவர். இன்று ஈழமக்கள் நடுக்கடலில் மாலுமியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் ஏதும் செய்வதாகவும் செய்தியில்லை. என்ன செய்யப்போகிறாரென்றும் தெரியவில்லை. முந்தைய நிகழ்வின் போது தொடர்ந்து தேர்தல் இருந்தது, ஆனால் இப்போது அப்படி ஒன்றும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏதும் நெருக்கடி வந்தால் இருக்கவே இருக்கிறார்கள் ஒருவாரமாய் போராடிப் பெறவிருக்கும் மத்திய அமைச்சரவைப் பதவிகள், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து விட்டு அதைச் சொல்லி சொல்லியே அறிக்கைகளில் தமிழினத்தலைவராகத் தொடரலாம். மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்த போதே ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால் (ஆறுமணி நேர உண்ணாவிரத்தினைத் தவிர). இனி அவர் சொன்னாலும் அவையெல்லாம் மத்திய அரசின் காதுகளுக்கு கேட்குமாவெனத் தெரியவில்லை. அது மட்டுமே அவர் மௌனத்திற்க்கு காரணமா? இல்லை ஈழமக்களுக்கு தமிழகத்தமிழர்கள் மத்தியில் ஆதரவில்லையென நினைக்கிறாரா? (ஓட்டு பெறாத விசயத்திற்கெல்லாம் போராட முடியுமா என்ன?)

ஒரு முல்லாக் கதை:

முல்லா ஊரில் நீதிபதிப் பதவி காலியானது. அரசர், ஏழையாய் இருந்து முன்னேறிய, பழசை மறக்காத, நேர்மையான ஒருவருக்குத்தான் நீதிபதி பதவியென அலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தார். அதை எப்படியோ தெரிந்து கொண்ட முல்லா மறுநாள் மீன் வலையோடு அரண்மனை வாசல் வழிச் சென்றார். அதைப் பார்த்த அரசன், முல்லாவை அழைத்து நமது ஊர்தான் கடலிலிருந்து 300 மைல் தொலைவில் இருக்குதே ஏன் மீன் வலையை சுமந்து கொண்டுச் செல்கிறாயெனக் கேட்க, முல்லாவும் அரசே நான் முன்பு மீன்பிடித்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் வாழ்ந்து வந்தேன். இப்போது வசதி வந்தாலும் தலைக் கனமில்லாமல் இருக்க இப்படி எப்போதும் மீன்வலையை சுமந்து கொண்டிருக்கிறேன்று சொன்னார். அரசரும் மகிழ்ந்து முல்லாவை நீதிபதியாக்கினார்.

சிலநாள் கழித்து அரசர் நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு முல்லா மீன் வலையில்லாமல் நீதிபதியாய் அமர்ந்திருந்தார். அரசனும் எங்கே மீன்வலையென்று கேட்க முல்லா சொன்னார், 'மீன்தான் பிடித்தாகிவிட்டதே! மீன்வலையெதற்கு?'

..

Wednesday, May 20, 2009

மழை களவாடிய முத்தம்

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ...
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்...

மழை பெய்த மாலையில்
நான் கொடுத்த முத்தத்தை
மழை களவாடியதால்
நீ கண்ணீரால் துரத்தி
உன் கண்ணீரும்
என் முத்தமும்
முத்தக்கண்ணீராய்...

தவிக்கும் உதடுகளும்
தடுக்கும் மனதுமாய்
நான் கரம் பற்றி உரசுகையில்
அரவணைக்கும் கண்களும்
அதிர்கின்ற மேனியுமாய்
நீ சிரம் சாய்த்து
பற்றிக் கொள்கிறாய்...

பேசவே வாய்திறந்தேன்
பெருமூச்சாய் விட்டுவிட்டேன்
முத்தமிட உதடு குவித்தாய்
'உச்'சுக்கொட்டி விட்டு விட்டாய்..

அன்று மழையால் கரைந்த பொழுதும்
மழையில் தொலைத்த மனதும்
இன்று உன் குழந்தைக்கு
மழை காட்டும்போது
உறுத்துகிறது நிதர்சனமாய்...

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்..

..

Tuesday, May 19, 2009

இந்திய ஜனநாயகத்தில் பண நாயகர்களின் பங்கு

தமிழகத்தில் 65 முதல் 68 சதவீதம்வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தீர்ப்பு மே-16 ல் தெரியவரும். அரசியல் விமர்சகர்கள் கருத்துகளின்படி மத்தியில் இழுபறியாகவே முடிவுகள் வரும். தமிழகத்திலும் பாதிக்குப்பாதி எதிர்கட்சி கைக்கு போகுமென தெரிகிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா அதிகமாகி இருந்தன் காரணம் ஆளுங்கட்சிக்கு திருமங்கலம் கொடுத்த பாடம். திருமங்கலத்தில் கொடுத்த பணமெல்லாம் ஓட்டாய் வந்து குவிந்ததன் விளைவுதான் இந்த தேர்தலிலும் பணத்தை வாரிஇறைத்தார்கள். விஜயகாந்த் திருமங்கல தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் ஓட்டை மட்டும் தே.மு.தி.க வுக்கு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் பணம் வாங்காதீர்கள் அது பாவப்பட்ட பணம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்தது. எங்கள் தொகுதியை பொறுத்தவரை பணப்பட்டுவாடா இருக்காது என்றே நினைத்தேன் வாரிசுகள் நிற்கும் முக்கிய தொகுதிகளில் மட்டும் தான் பணப்பட்டுவாடா இருக்குமென தவறாக நினைத்து விட்டேன். வீட்டில் அம்மாகூட தொலைபேசியில் பேசும் போதுதான் தெரிந்தது, எங்கள் பகுதியிலும் (விருதுநகர் தொகுதி) பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது ஒரு வோட்டுக்கு 150 ரூபாய் வீதம் கவரில் வைத்து அனைத்து வீட்டுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. சில வீடுகளில் 'பணமெல்லாம் வேண்டாம் நாங்க உங்களுக்குத் தான் ஓட்டளிப்போம்' என சொல்லியும் கேட்காமல் பணக்கவரை வீட்டினுள் வைத்து சென்றிருக்கிறார்கள்.

நான் கவனித்த இன்னொரு விசயம், ஈழ மக்கள் பிரச்சனையில் தி.மு.க மீது அதிருப்தி கொண்ட பழைய வாக்காளர்களும் கலைஞருக்காக தி.மு.க கூட்டணிக்கே ஓட்டளித்து இருப்பதாக கேள்வி.(இது லக்கி லுக் முன்பே சொன்னதுதான்) ஆரம்பத்திலிருந்து தி.மு.க விற்கு வாக்களிப்பவர்களால் சட்டென்று மாற முடியவில்லை. (இது எனக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்து அறிந்தது தமிழகத்தின் முழுஆய்வு அல்ல) 200 லிருந்து 500 வரை ஒரு வோட்டுக்கு பணமளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் எனது நண்பரின் வீட்டிலும்(கரூர்) வேண்டாமென்று சொல்லியும் ஓட்டுக்கு ரூ 200 வீதம் ஆளுங்கட்சியினர் வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தை விலை பேசும் இந்த போக்கு கண்டிக்கபட வேண்டியது அவசியம். துரதிஷ்டவசமாக இதை எதிர்க்க தார்மீகரீதியில் எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. எதிர் கட்சியிலிருப்பவர்களுக்கு தம்மால் அந்த அளவுக்கு பணம் தரமுடியவில்லை என்ற வருத்தம்தான் அதிகமாக இருக்கிறது. (நாளை ஆளும்கட்சியாகி பணவசதி வந்தால் அப்போது இந்த உத்தி உபயோகமாகுமே!)

இனிவரும் தேர்தல்களில் இந்திய ஜனநாயகம் இந்த பணநாயகர்களோடுதான் அதிகம் போராட வேண்டிவரும். இந்த விசயத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய ஊடகவியலாலர்கள் முக்கியப்பங்கு வகிக்க வேண்டியது அவசியம். பொதுவாக தமிழக பத்திரிக்கையாளர்கள் அத்தனை துணிச்சலானவர்கள் இல்லையென்பது எனது எண்ணம்.(இல்லையென்றால் இலைமறைகாயாக ஆனந்தவிகடனில் எழுத வேண்டிய அவசியமென்ன? இலங்கையில் சண்டே லீடர் ஆசிரியருக்கு இருந்ததைவிடவா ஆனந்தவிகடனின் ஆசிரியருக்கு இந்திய ஜனநாயகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது- ஒரு சோறு பதம்)

சமூகசீர்திருத்த ஆர்வலர்கள்தான் இந்த விசயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை எற்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசியல் வியாபாரிகள் இந்திய ஜனநாயகத்தை சுவிஸ் வங்கி லாக்கரில் பதுக்கிவிடும் அபாயமிருக்கிறது.