Thursday, October 29, 2009

உள்ளுரசும் நினைவு

தேயத் தேய நடந்தாலும்
தேய்ந்த பின்னும்
மிஞ்சுகிறது..
உன் நினைவு போல
பாத ரேகை..

************"************"************"*************"*****

பெஷாவரில் குண்டுவெடிப்பு..
ஆள் தோட்ட பூபதி நானடா..
மானாட..
மச்சி சொல்லு மயிலாட..
ஆணியே புடுங்க வேணா..
முதலையின் முதுகில் ட்ரான்ஸ்மிட்டர்..
நறுக்கிய வெங்காயம் ஒரு கப்..
எத்தனை தாவினாலும்

வெயில் நேர மின்விசிறியால்
விரட்ட முடியாத
வியர்வை பிசுபிசுப்பாய்
உன் நினைவு..

************"************"************"*************"*****

உன்னிடம் பேச நினைத்த
பேச்சுக்களெல்லாம்
உள் நாக்கில்
தூக்கு போட்டு
தொங்கிக் கொண்டிருக்கிறதே..
எப்போது துப்புவது?
எப்படி துப்புவது?

************"************"************"*************"*****

காய இருந்த துணி
ஆற்று மண்ணில் விழுந்தால்
உதறி காய வைக்கலாம்
கரிசல் மண்ணில் விழுந்தால்
அலசி காய வைக்கலாம்

கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்

************"************"************"*************"*****

நண்பன் சொன்னான்
உன்னை பிரிந்த பின்புதான்
என் முகம் பொலிவிழந்ததாய்..
அவனுக்குத் தெரியாது
உன் நிழலை
நான் சுமப்பது..

.

Monday, October 19, 2009

ஒரு காத்திருத்தலின் போது..

பழ கடைக்காரரின்
ஆர்வப்பார்வை
உதறி திரும்பினேன்..

வலப்பக்கம்
மகளுக்கு
மானாவாரியாய்
ஆலோசனைகளை
வழங்கும் வயதான தாய்..

இடப்பக்கம்
இந்திய ஜனநாயகத்தை
சரிபார்த்துக் கொண்டு
இருவர்..

இவர்களையெல்லாம்
சரி பார்த்துக்கொண்டு
நான் ?

பேருந்தின்
பேரிரைச்சலுக்கு
பின் கேட்டது
சிறகு விரித்த
சிரிப்புகள் சில..

பேருந்து நிறுத்தத்தில்
மண்பானைத் தண்ணீரா
தாகத்திற்கு பருகினேன்..

ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..

சிந்தனையின்
சிறகு பறித்து
கற்பனைக்கு
கடன் தந்தாள்..

சில நொடியில்
விழி சுழற்றி
வழி மறித்தாள்
அவள்
விழிவழி
கொஞ்சம் உலகம்
பார்த்தேன்..

இப்போதும்
பேருந்து வந்தது
ஆனால்
தென்றாலாய் நகர்ந்தது..

இப்போது நிறுத்தத்தில்
நான்
காலி மண்பானை
பழக் கடைக்காரரின்
பரிகாசப் பார்வை..

-- 06/04/2000
(பழைய டைரியின் பரிகாசம்)


.

Thursday, October 15, 2009

பிள்ளைச் சூடு

பக்கத்தில்
தடவிக்கொண்டிருக்கிறேன்
சந்தேகமில்லை..
இது என் பிள்ளைச் சூடுதான்
காய்ந்து போன கைவிரல்களில் பரவி
நெஞ்செல்லாம் நிறைந்தது..

அந்த கடைசிப்பகலில்
தடவிக்கொண்டிருந்த பிள்ளையை
செல்லடிக்கும் சத்தம் கேட்டதும்
அம்மா தூக்கிக்கொள்ள..
கண்ணி வெடியால் முடமாகி
மூன்று நாளாய் முனங்கும்
சின்னையனை நான் முதுகில்
தூக்கியும் இழுத்தும் கொண்டு..

அந்த கலைந்த வரிசையில்
கோர்த்துக் கொண்டோம்..
சின்னையனின் முனங்கலோடு
அம்மாவின் குரலும் கேட்டது
பிள்ளை மயங்கிருச்சு
வார்த்தைகளும் வாக்கியங்களும்
குழப்பமாய் எனக்குள் சிக்கிக்கொள்ள
யாரோ சொன்னர்கள்
அந்த ஆர்மிக்காரன்கிட்ட
பிள்ளைக்கு கொஞ்சம் தண்ணி கேளு
அம்மா இடுப்பாலே நகர்ந்தாள்..

சில நிமிசத்தில்
பெரிய சத்தம் நிறைய கரும்புகை
நினைவு வந்ததால் தேடினேன்..
அம்மாவும் பிள்ளையும் எங்கே?
சின்னையன் வலக்கை மட்டும்
என் முதுகில் இருந்தது
நிறைய கறியோடும் கரியோடும்..

இத்தனை நாளில்
யாரிடமும் கேட்டதில்லை
கேட்கவும் பயமாயிருந்தது
அம்மாவும் பிள்ளையும் எங்கெயென..
கேட்டால், செத்ததாக சொன்னால்..
நிச்சயமிருக்காது வேறுமுகாமில்தான்
இருக்க வேண்டும்..

பிள்ளைக்கு பாலைத்தவிர
வேறெதும் எடுக்காதே
பாலெங்கே கிடைக்கும் முகாமில்
ஒருவேளை பாலில்லாமல்..
போதும்
இதற்குமேல் நினைக்க வேண்டாம்..
இந்த பிள்ளைச்சூடு போதும்
பிள்ளைக்கு இன்னும்
பேர்கூட வைக்கலையே..
வறண்ட கண்களை
வெற்றாய் துடைத்தேன்..

வழக்கமான சத்தங்களுக்கிடையில்
புதிதாய் சில ஊடுருவலிருந்தது
யாரோ தமிழ்நாட்டிலிருந்து வர்றாங்களாம்
யாரோ இல்லை அரசியல்வாதிகள்..
உன் பிள்ளையைத் தேடி தரச்சொல்லு
இடுப்பொடிந்த இரண்டாமவள் சொன்னாள்

இந்த இளஞ் சூட்டில்
பிள்ளையைத் தடவும்
எனக்குத் தெரியும்
இவங்களை நம்பினால்
இந்த பிள்ளைச்சூடும்
பறி போய்விடுமென..


.

Wednesday, October 7, 2009

உலகம் மீதம் உள்ளது..

உன்னையும்
உன் நினைவுகளையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

மனப்பாறை மீது
மயக்க அலையாய் மோதி
மணல் பாதையாய் மாற்றிய
உன்னை விடவும்
உயர்வாய் சில விசயங்கள்
உள்ளன உலகில்..

உலகில் உள்ள
ஒலியெல்லாம்
உன் பெயரின் உச்சரிப்பாய்
உணர்ந்த நானே
இதையும் சொல்கிறேன்
இதயம் திறந்து சொல்கிறேன்..

என் கனவுகளை
உன் நினைவுகளோடு
உள்ளத்தில்
உறங்க வைத்து விட்டேன்..

ஊடுருவும்
விழிச்சொருகலையும்
உதட்டோர வளைவையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

-- 14/01/2000
(பழைய டைரியின் பரிகாசம்)

.

Thursday, October 1, 2009

வாய்மையே வெல்லும்"என் எண்ணங்கள் என் செயல்களை கட்டுப்படுத்த அனுமதித்தால், நான் வீணாவேன். அதே சமயம், நாம் இந்த கெட்ட எண்ணங்களைப் பற்றி கவலைப்படக் கூடாது." - மஹாத்மா காந்தி

.