Tuesday, June 9, 2009

முற்றுப்பெறாத கேள்விகள்

இலங்கை தமிழர்களின் மீது இந்தியாவுக்கு அக்கறையிருப்பதாகவும் அவர்களது நல்வாழ்விற்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் 1000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் புனரமைப்பிற்காக நிதி வழங்குவது அவசியமான ஒன்றுதான். ஆனால் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்பது எவ்வகையில் உறுதி செய்யப்படுமென்று தெரியவில்லை. அந்த 1000 கோடிப் பணம் பயன்படுத்தப்படுவதை இந்தியா எதேனும் குழு அமைத்து கண்காணிக்குமா அல்லது 1000 கோடிக்கு இரண்டு தவணையாக இலங்கைக்கு காசோலை அனுப்பி விட்டு பாரத பிரதமரும், தமிழகத் தலைவரும் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை பங்கிட்டுகொள்வார்களா எனத் தெரியவில்லை. 1000 கோடிப்பணம் கொடுக்கப்படும்போது நமது மேற்பார்வையின் கீழ் மட்டுமே அவை செலவழிக்கப்பட வேண்டுமென்று கேட்க இந்தியாவிற்கு உரிமையிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, கிடைக்கும் நிதியை தமிழ் மக்களின் புனரமைப்பிற்கு பயன்படுத்துவார்கள் என்பது நம்பமுடியாத விசயம். அதே போல சில தமிழக எம்.பி களும், இங்குள்ள ஈழதமிழ் ஆதரவாளர்களும் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களின் பகுதிகளை பார்வையிடலாம். அதையெல்லாம் விட இங்குள்ள இலங்கை அகதிகளின் முகாம்களுக்கு சென்று அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஏதாவது வழிபிறக்கும். (எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்: புலம் பெயர்ந்து மற்ற நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் போராடுகிறார்கள். போராட்டங்களுக்கு தார்மீக மற்றும் பண உதவி செய்கிறார்கள். இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை அகதிகளின் நிலை என்ன? அவர்கள் குரல் கொடுக்க இந்திய இறையாண்மையில் இடமில்லையா? அல்லது அவர்கள் இலங்கையை மறந்து விட்டர்களா?)

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"

குறள் விளக்கம்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே நாம் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

தேர்தல்நேர திடீர் ஈழஆதரவாளர்கள் இப்பொது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதென இலங்கை அரசு அறிவித்தவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரும் மாண்டுவிட்டார்களென தலைமுழுகி விட்டார்களா? ஈழமக்களின் எதிர்கால வாழ்வில் நமக்கு அக்கறையில்லையா? ஈழமக்களின் இளைய தலைமுறையை நாம் புறக்கணிக்கலாமா? வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்? தலையில் முள் கிரீடம் ஏதுமில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தும் அளவிற்கு பேச விடுதலைப்புலிகளும் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக திருமா,வைகோ,ராமதாஸ் போன்றவர்கள் தைரியமாகப் பேசி மத்தியில் இருக்கும் வடஇந்திய எம்.பிகளிடம் ஈழமக்களுக்கான ஆதரவைத் திரட்டலாமே. ஏன் தமிழக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும். வட இந்திய ஊடகங்களும் மக்களும் தமிழர்களுக்கு எதிராக இருப்பதால் தானே விடுதலைப் புலிகளுடனான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அருந்ததிராய், மேதா பட்கர், இப்போதைய சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களின் ஈழமக்கள் ஆதரவை நாம் முறையாக பயன்படுத்தவில்லை.

ஈழ ஆதரவாளர்கள் இன்றைய ஈழமக்களின் எதிர்கால வாழ்வை முன்னிட்டு என்ன செய்யப் போகிறார்கள் அல்லது இவர்கள் எண்ணமெல்லாம் தமிழக மக்களை உணர்ச்சிவசப்பட செய்து அதில் பலன் பெறுவது மட்டும் தானோ என நினைக்கத் தோன்றுகிறது. நமது பத்திரிகைகளும் நயன்தாராவின் ரகசிய திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஈழ விவகாரம் போனியாகாதென்பது தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு கொடுத்த பாடமாக இருக்கக்கூடும். பதிவர்கள் கூட பலர் மறந்து விட்டார்கள். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று இருந்தால் நாம் தமிழின் பெருமை தமிழனின் வீரம் குறித்து சிலாகித்து கொண்டிருந்திருப்போம். இப்போது அதைப்பற்றி பேச விரும்பவில்லை. உண்மையான ஈழ ஆதரவாளர்களின் நிலைதான் பரிதாபகரமானது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே உள்ளூர் தேசியவாதிகளிடம் வாங்கிக் கட்டி கொண்டாகி விட்டது. இப்போது புலம்பெயர்ந்த ஈழமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து"

குறள் விளக்கம்: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்க கூடியதாக இருப்பின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

.

8 comments:

பழமைபேசி said...

//அருந்ததிராய், மேதா பட்கர், இப்போதைய சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களின் ஈழமக்கள் ஆதரவை நாம் முறையாக பயன்படுத்தவில்லை.//

இதெல்லாம் நம்ம ஆட்களுக்கு தெரியாதுங்க... அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஆய் ஊய்னு குரல் ஒசத்திப் பேசுறவங்க மட்டுமே.... ;-0(

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

திருக்குறள் அபாரம்!

Anonymous said...

இரண்டடி குறளால் போலி ஈழ ஆதரவாளர்களுக்கு நீங்கள் கொடுத்தது எல்லாமே சவுக்கடி

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு கணேஷ்.. கேட்க வேண்டியவர்கள் காதில் இது விழுந்தால் சரி..

Suresh said...

திருக்குறள் சரியான இடத்தில் :-) நச்

கண்ணா.. said...

//உண்மையான ஈழ ஆதரவாளர்களின் நிலைதான் பரிதாபகரமானது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே உள்ளூர் தேசியவாதிகளிடம் வாங்கிக் கட்டி கொண்டாகி விட்டது. இப்போது புலம்பெயர்ந்த ஈழமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்//

உண்மை....

நல்ல அலசல் கணேஷ்...

தீப்பெட்டி said...

@பழமைபேசி,
@உடன்பிறப்பு,
@கார்த்திகைப் பாண்டியன்,
@சுரேஷ்,
@கண்ணா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..

Post a Comment