Thursday, October 15, 2009

பிள்ளைச் சூடு

பக்கத்தில்
தடவிக்கொண்டிருக்கிறேன்
சந்தேகமில்லை..
இது என் பிள்ளைச் சூடுதான்
காய்ந்து போன கைவிரல்களில் பரவி
நெஞ்செல்லாம் நிறைந்தது..

அந்த கடைசிப்பகலில்
தடவிக்கொண்டிருந்த பிள்ளையை
செல்லடிக்கும் சத்தம் கேட்டதும்
அம்மா தூக்கிக்கொள்ள..
கண்ணி வெடியால் முடமாகி
மூன்று நாளாய் முனங்கும்
சின்னையனை நான் முதுகில்
தூக்கியும் இழுத்தும் கொண்டு..

அந்த கலைந்த வரிசையில்
கோர்த்துக் கொண்டோம்..
சின்னையனின் முனங்கலோடு
அம்மாவின் குரலும் கேட்டது
பிள்ளை மயங்கிருச்சு
வார்த்தைகளும் வாக்கியங்களும்
குழப்பமாய் எனக்குள் சிக்கிக்கொள்ள
யாரோ சொன்னர்கள்
அந்த ஆர்மிக்காரன்கிட்ட
பிள்ளைக்கு கொஞ்சம் தண்ணி கேளு
அம்மா இடுப்பாலே நகர்ந்தாள்..

சில நிமிசத்தில்
பெரிய சத்தம் நிறைய கரும்புகை
நினைவு வந்ததால் தேடினேன்..
அம்மாவும் பிள்ளையும் எங்கே?
சின்னையன் வலக்கை மட்டும்
என் முதுகில் இருந்தது
நிறைய கறியோடும் கரியோடும்..

இத்தனை நாளில்
யாரிடமும் கேட்டதில்லை
கேட்கவும் பயமாயிருந்தது
அம்மாவும் பிள்ளையும் எங்கெயென..
கேட்டால், செத்ததாக சொன்னால்..
நிச்சயமிருக்காது வேறுமுகாமில்தான்
இருக்க வேண்டும்..

பிள்ளைக்கு பாலைத்தவிர
வேறெதும் எடுக்காதே
பாலெங்கே கிடைக்கும் முகாமில்
ஒருவேளை பாலில்லாமல்..
போதும்
இதற்குமேல் நினைக்க வேண்டாம்..
இந்த பிள்ளைச்சூடு போதும்
பிள்ளைக்கு இன்னும்
பேர்கூட வைக்கலையே..
வறண்ட கண்களை
வெற்றாய் துடைத்தேன்..

வழக்கமான சத்தங்களுக்கிடையில்
புதிதாய் சில ஊடுருவலிருந்தது
யாரோ தமிழ்நாட்டிலிருந்து வர்றாங்களாம்
யாரோ இல்லை அரசியல்வாதிகள்..
உன் பிள்ளையைத் தேடி தரச்சொல்லு
இடுப்பொடிந்த இரண்டாமவள் சொன்னாள்

இந்த இளஞ் சூட்டில்
பிள்ளையைத் தடவும்
எனக்குத் தெரியும்
இவங்களை நம்பினால்
இந்த பிள்ளைச்சூடும்
பறி போய்விடுமென..


.

11 comments:

நர்சிம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை..

கார்த்திகைப் பாண்டியன் said...

நெஞ்சம் விம்முகிறது நண்பா.. பெருங்கொடுமை..:-(((

பிரபாகர் said...

//இவங்களை நம்பினால்
இந்த பிள்ளைச்சூடும்
பறி போய்விடுமென..
//

யதார்த்தமான வரிகள் நண்பா... மனம் கனக்கிறது.

என்ன சொல்ல, படித்தால் அடக்க முடியாத சோகம்தான் எழுகிறது...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பிள்ளைக்கு இன்னும்
பேர்கூட வைக்கலையே..//

ப்ச்.. ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய வரிகள் கணேஷ்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

ஆ.ஞானசேகரன் said...

//இத்தனை நாளில்
யாரிடமும் கேட்டதில்லை
கேட்கவும் பயமாயிருந்தது
அம்மாவும் பிள்ளையும் எங்கெயென..
கேட்டால், செத்ததாக சொன்னால்..
நிச்சயமிருக்காது வேறுமுகாமில்தான்
இருக்க வேண்டும்..//

சொல்ல முடியாத வலிகள்

வினோத் கெளதம் said...

வலிகள் நிறைந்து இருக்கிறது வரிகளில் கணேஷ்...

vasu balaji said...

:((. வார்த்தையில்லை கணேஷ். கடைசி வரி சத்தியம்:((

Jackiesekar said...

வழக்கமான சத்தங்களுக்கிடையில்
புதிதாய் சில ஊடுருவலிருந்தது
யாரோ தமிழ்நாட்டிலிருந்து வர்றாங்களாம்
யாரோ இல்லை அரசியல்வாதிகள்..
உன் பிள்ளையைத் தேடி தரச்சொல்லு
இடுப்பொடிந்த இரண்டாமவள் சொன்னாள்//

கண்துடைப்புக்கு வந்தவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்...??

கண் கலங்க வைத்து விட்டாய்...

தீப்பெட்டி said...

@நர்சிம்,
@கார்த்திகைப்பாண்டியன்,
@பிரபாகர்,
@வசந்த்,
@ராஜ்குமார்,
@ஞானசேகரன்,
@வினோத் கெளதம்,
@வானம்பாடிகள்,

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

தீப்பெட்டி said...

@ஜாக்கி,
வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி பாஸ்..

Post a Comment