Wednesday, July 1, 2009

தூக்குவாளியும் மஞ்சப்பையும்..

'கணேஷ் போய் 3 புரோட்டா வாங்கிட்டு வர்றியா.. தூக்குவாளி கழுவி வச்சுருக்கேன் பாரு!.. அப்பா சட்டயில பணமெடுத்துக்கோ..' அம்மா சொல்லும் போதே வயர் கூடய தேட ஆரம்பிச்சுடுவேன். வயர் கூட தான் அப்பலாம் எனக்கு பிடிக்கும். 'சும்மா தேடிட்டு இருக்காம அந்த மஞ்சப்பைய எடுத்துட்டு போ' மஞ்சப்பை எல்லாம் 12 வயசு பெரிய மனுசனான எனக்கு கெளரவக் குறைச்சல் தான். எங்கள் வீட்டு அலமாரியில் மேல்தட்டின் ஓரத்தில் மஞ்சள் பைகள் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் எப்போதாவது செல்லும் பணக்கார வீட்டு கல்யாணத்திலும், துணி கடையிலும் கொடுக்கப்பட்டவையாக இருக்கும். அந்த மஞ்சள் பைகள் துவைத்தும் பயன்படுத்திய நாட்கள் நினைவில் இருக்கு. எனக்குப் பிடிச்ச வயர் கூடைகளை அத்தை பெண்கள் பின்னித் தருவார்கள். பள்ளி விடுமுறை காலங்களில் அவர்கள் வீட்டில் 2,3 வண்ணங்களில் 5,6 வயர் ரோல்கள் இருக்கும். வண்ணக் கலவையாக பின்னப்படும் அந்த வயர் கூடை எனக்கு சில வேளைகளில் பள்ளி செல்லவும் பயன்படும். அம்மாவோடு மார்கெட்டுக்கும், சொந்த பந்த வீடுகளுக்கும் பயணப்படும். செல்லும் வீடுகளிலெல்லாம் வயர் கூடை பின்னலைப் பற்றி கேட்காதவர்கள் இருந்ததில்லை (இருந்தாலும் அவர்களிடம் அம்மா அதை சொல்லாமல் வந்ததில்லை). காய்கறி வாங்கணுமா? துணிமணி வாங்கணுமா? டீ,பால்,ரோஸ் மில்க் வாங்கணுமா? கோயிலுக்கு போணுமா? எல்லாத்துக்கும் அன்னைக்கு தேதில எங்க வீட்டில் தூக்கு வாளியும் மஞ்சப்பையும் வயர்கூடையும் முக்கியம். அதே போல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய், சில்லு கருப்பட்டி யெல்லாம் பனை ஓலையில் செய்யப்பட்ட பேக்கிங்ல (அதுக்கு பேரு யாருக்காவது தெரியுமா பாஸ்) தான் வங்கிட்டு போவோம்.

இன்னைக்கு தூக்குவாளியையும் மஞ்சப்பையையும் சீந்த ஆளில்லை, எங்க போய் எவ்வளோ வாங்கினாலும் வீட்டிலிருந்து பணம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். சென்னையில் கரும்புசாறை கூட பாலித்தீன் கவரில் வாங்கிட்டுப் போறாங்க. நாம நோகாம நொங்கு தின்னுட்டுத்தான் இருக்கோம். ஆனா இது நம்ம வருங்கால சந்ததியினருக்கு எவ்வளோ பெரிய பாதிப்பை ஏற்பத்துமென்று நமக்கு தெரியவில்லை. மெத்த படித்த நம்மில் பலர் தெரியாதது போல் நடிக்க பழகிக் கொண்டுவிட்டோம். நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க புத்தியில்லை பொறுமையில்லை, ஆனால் அரசியல்வாதிகளை, நடிகர்களை குற்றம் சொல்ல பழக்கப்படுத்திக் கொண்டோம். நமது முப்பாட்டன்கள் நமக்காக கரடுமுரடான காடு, மலைகளை இரத்தத்தை வியர்வையாக சிந்தி திருத்தி பண்பட்ட விளைநிலங்களாக மாற்றிக் கொடுத்தனர், இன்று நாம் நமது வசதிக்காக நமது பேரப்பிள்ளைகளுக்கு சுகாதாரமற்ற உலகை விட்டுச்செல்லப் போகிறோம். முன்னோர்கள் நமது சுமையை குறைத்தார்கள், நாம் நமது சுமையையும் சேர்த்து நமது குழந்தையின் தலையில் இறக்குகிறோம். (மன்னிப்பே கிடையாதுடா கணேசா உனக்கு)

தொடர்புடைய இன்றைய செய்தி:

#ஆகஸ்ட் 15 முதல் மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களை விற்க, பயன்படுத்த தடை.(இந்த தடை காண்டத்திற்கும் பொருந்துமா?!)


சில கேள்விகள்:

1. தமிழகம் முழுதும் குறைந்த பட்சம் சென்னை முழுதும் இதை செய்தால் என்ன?
2. கட்டாய தலைகவசம் (ஹெல்மெட்) போல இதுவும் கைவிடப்படுமா?
3. காகிதப் பை, சணல் பை உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியமளித்து குறைந்த விலையில் கிடைக்கச்செய்தால் என்ன? ( சினிமாவோட கேளிக்கை வரியை ரத்து பண்ணுறத விட இது ரொம்ப நல்லது, காடுகள் அழியும் அபாயமும் இருக்கு இதுல)
4. தமிழகத்தில் பிளாஸ்டிக், காகிதம் மறுசுழற்சி முறை செய்யும் ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? அரசின் கவனம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறதா?

தொடர்புடைய பதிவுகள்:
1. சில அதிர்ச்சிகர உண்மைகள்
2. பிளாஸ்டிக் கலாச்சாரம்



.