Wednesday, September 23, 2009

எல்லாம் 'காந்தி'ய வழியில்..

காந்தியை விற்றே
பட்டம் வாங்கினேன்
வேலை வாங்கினேன்..

காந்தியை விற்றே
நிலங்களை வாங்கினேன்
சில நியாயங்கள் வாங்கினேன்..

காந்தியை விற்றே
காரியம்பல சாதித்தேன்
சாராயமும் குடித்தேன்..

ஆனால்
காந்தியை வாங்கித்தான்
திருமணம் செய்தேன்
ஓட்டும் போட்டேன்..

விற்கும்போது
சிரித்த காந்தி
வாங்கும் போதும்
சிரிக்கிறார்..

இன்னுமா சந்தேகம்
காந்தி
தேசப்பிதா தான்..

.

Wednesday, September 16, 2009

மொட்டை மாடி..


எத்தனை முறை
எண்ணிப் பார்த்தாலும்
எண்ணிக்கை
முற்றுப் பெறவில்லை

முழுக்க சிதறிய
நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி
விழி சோர்ந்தேன்..

தன் முந்தானையால்
என்னை மூடி
கையால் தட்டித்தட்டி
கதை சொல்கிறாள் பாட்டி..

இறந்தாலும் பெண்மனம்
நிம்மதியாய் இருப்பதில்லை
பகலில் பயந்திருந்தாலும்
இரவில் யமனுக்கு
போக்குக் காட்டி
நட்சத்திரமாய் வந்து
தமது பிள்ளைகளை
பார்க்கின்றனர் பெண்கள்

நூலிழையில் தொடர்பவிழ
நிகழ்காலத்தில் விழுந்து
சிதறிய நட்சத்திரங்களுள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கேயிருக்கிறாள் பாட்டி..

.

Monday, September 14, 2009

நடிகர் கெட்டால்..

ராணுவத்துல இருந்து ஓய்வுபெறுபவர்கள் என்ன பண்ணுவாங்க.. ஏதாவது ஒரு அரசாங்க அல்லது தனியார் அலுவலகத்தில் காவலாளியா இருப்பாங்க. ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் பக்கத்து வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு கட்டணம் வாங்கியோ வாங்காமலோ வகுப்பெடுப்பங்க, மத்தவுங்க எதாவது பெட்டிக் கடை வச்சு உக்காருவாங்க. சிலர் ஊர்ஊரா சுத்தி கடவுளத்தேடிட்டு இருப்பாங்க, பலர் வீட்டுல இருக்குறவுங்க பிரச்சனைய தலைல போட்டு உருட்டிட்டு இருப்பாங்க,

அந்த வரிசையில் நடிகர்கள் நல்லா சம்பதிச்ச பிறகு எப்போ நாம நடிச்சா நம்ம குடும்பமே உக்காந்து படம் பாக்க மாட்டங்கனு தெரிஞ்சவுடன் எடுக்கிற அடுத்த முடிவு எதாவது அரசியல் கட்சில சேருறதுதான். அவுங்க தகுதிக்கு ஏற்ப குவாட்டர்,பிரியாணி கட்சிப்பொது கூட்டங்களோ, எம்.எல்.ஏ,எம்.பி,மந்திரிப் பதவிகளோ கிடைக்கும். வாய்ஸ் இருக்குறவுங்க தனிக்கட்சி ஆரம்பிப்பாங்க. திரைத்துறையில வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள் அரசியல்ல வாரிசுகளை வளர்க்க முயற்சி பண்ணுவாங்க. 'ஏதோ கெட்டா குட்டிசுவரு' சொல்லுறது போய் இப்போலாம் 'நடிகன் கெட்டால் அரசியல்'னு தான் சொல்லுறாங்க.எது எப்படியோ நமக்கும் வயசான, செயல்படாத பஞ்ச் டயலாக் மட்டும் பேசத்தெரிந்த தலைவர்கள் கிடைப்பாங்க. அவுங்க ஒத்திகை இல்லாத நடிப்ப பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமையுமென்றாலும், அது எவ்வளவு கொடுமையானதென்று தமிழக மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு.

இப்படி போய்ட்டு இருந்த தமிழக அரசியல்ல கொஞ்ச நாளா ஒரு உண்மை கலந்த வதந்தி. விஜய் தனிக்கட்சி ஆரம்பிப்பார், இல்லை தேசிய கட்சியில் சேரப்போறார். கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாவும் எனக்கு கொஞ்சம் ஆர்வமாவும் இருந்தது. விஜயோட அரசியல் பிரவேசம் பற்றி நிறைய கருத்துகள் இருந்தது. பொதுவா அரசியலில் 'தாதா'க்களுக்கு அப்புறம் தாத்தாக்களுக்குத் தான் முதல் மரியாதை. நீங்க 'தாதா'வாவும் தாத்தாவாவும் இருந்தீங்கனா சீக்கிரமா ஏதாவது அரசியல் கட்சில சேருங்க. கூடவே திரைத்துறையில இருந்தீங்கனா தைரியமா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.

இந்தியாவில் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுவதை அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ யாருமே விரும்புவதில்லை, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போறாருனதும் நிறைய எதிர்கருத்துகள், திரைத்துறையில் அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்குனும் இன்னும் சில நூறுகதாநாயகிகளுடன் தயிர்சாதம் ரெடி பண்ண வேண்டுமென கூக்குரல்கள். ஆதரவு தரப்பிலிருந்துதான் இந்த கருத்துகள்னு பார்த்தா எதிர்தரப்பிலும் அதே கருந்துகள் தான். இங்க என்ன கிழிச்சுட்டாருனு அங்க போய் கிழிக்கப்போறார்னு கேட்குறாங்க. சரி அப்போ இங்க இருந்து கிழிச்சுட்டே போறேனு அவரும் வடுமாங்கா ஊறல தேடி போய்ட்டார். சினிமா தப்பிச்சதுனு(காமெடி கீமெடி பண்ணலியே) சிலரும், அரசியலும் தப்பிச்சதுனு சிலரும் சொல்லுறாங்க, எது தப்பிச்சதுனு போகப்போக தெரியும்.

எப்படியோ 60 வயசுல விஜய் அரசியல குதிப்பார்னு நம்பலாம். அதுவரை அவரோட அப்பா ஏதாவது கட்சில சேர்ந்து பயிற்சி எடுத்துக்கலாம். நமக்கு இன்னுமொரு தாத்தா தலைவர் தயாராகிறார்.

ஒரு குறள்:

'ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்து படும்'

குறள் விளக்கம்:

முறையாக செய்யப்படாத முயற்சியானது எத்தனை பேரின் துணையிருந்தாலும் இறுதியில் முடங்கிப் போய்விடும்.


ஒரு முல்லா கதை:

மனைவி இறந்து விட்டதால் 60 வயதில் மறுமணம் செய்யபோவதாக முல்லா தன் நண்பர்களிடம் சொன்னார். நண்பர்களெல்லாம் 'காலம் போன காலத்துல சும்மா வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோமின்னு இருக்காமா, கல்யாணம் அவசியம்தானா?' கேட்டாங்க.
முல்லாவும் 'வயசான காலத்துல வாய்க்கு வக்கனையா கொஞ்சம் சாப்பிட்டு சாகலாம்னுதான் கல்யாணம் பண்ணிக்குறேன்'னு சொன்னார். உடனே நண்பர்கள் 'வர்றவ மோசமானவளா இருந்து சரியா சமைச்சுப் போடாம இருந்தா என்ன பண்ணவீங்க'னு சொல்ல, உடனே முல்லா சொன்னார் 'அவள் கூட இருக்கப்போறது கொஞ்ச நாள் தானேனு மனச தேத்திக்கிட்டு இருப்பேன்'


.

Saturday, September 5, 2009

என்ன செய்வது?

துரத்திக் கொண்டிருந்தேன்
தூரத்தில் அவள்..
களைத்து விழுந்தேன்
வியர்வையாய் வெளியேறின
உள் உறைந்த காமங்கள்..

களைத்த முகத்தில்
கூந்தலால்
குறுக்கு கோடிட்டாள்..
உயிர் தெளித்து
விழிதிறந்து எட்டிப்பிடிக்கையில்
அவள் இளஞ்சிரிப்பு மட்டும்
இமைகளுக்குள் சிக்கிக்கொண்டது..

சிரிப்பு தந்த குறிப்புகளை
சிதறாமல்
பிரதிகளெடுத்து
மூளை நரம்புகளின்
மூலைமுடுக்கெல்லாம்
சேமிக்க செய்தியனுப்பினேன்..

இன்னும் இமை திறக்கவில்லை..
விழியுள் உறைந்த
அவள் அடையாளத்தை
வெளியிட விருப்பமில்லை..
இப்படியே இறந்துவிடவும் சம்மதமே..

ஆனாலும் பயமிருக்கிறது
கண்தானம் செய்திருக்கிறேனே
மருத்துவர் யாரேனும்
வலிந்து இமை திறந்தால்..


.