Tuesday, June 23, 2009

தூக்கம் நெய்த பொழுது..

தூக்கம் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அந்த தூக்கம் சிலருக்கு சுலபமாய் கிடைப்பதில்லை. நானும் பல தூக்கம் வராத இரவுகளை கடந்திருக்கிறேன். இன்னும் தூக்கம் வராத இரவுகள் எத்தனை இருக்கிறதோ..

இப்போதாவது பரவாயில்லை, நட்பும் காதலும் வெற்றியும் தோல்வியும் குழப்பமாய் இருந்த நாட்களில் நான் தூக்கத்தை புரிய முயற்சித்து தோல்வியடைந்தேன். அதற்கு முன்பு எங்க வீட்டில் எங்க அப்பாதான் என்னோட தூக்கத்தின் முதல் எதிரி. குடிக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கும் அம்மாவுக்கும் இரவு அவர் வீடு வந்து சேரும் வரை தூக்கம் வராது. விடிய விடிய முழித்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அதே போல பத்தாவது படிக்கும் போதிலிருந்து தேர்வு நாட்களிலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. எந்த தேர்வுக்கும் நான் முழுமையாக படித்ததில்லை அப்புறம் எப்படி தூக்கம் வரும். ரெண்டு நாள் படிப்பு மிச்சம் இருக்கும் ஒவ்வொரு தேர்வின் முதல் நாள் இரவிலும். ஆனாலும் அவற்றையெல்லாம் காலையில் சீக்கிரமெழுந்து படித்து விடலாமென அசாத்திய தைரியத்தோடு படுத்துவிடுவேன். ஆனாலும் அந்த தைரியம் ஏனோ என்னுடைய தூக்கத்துக்கு வராது. நாலு மணி அலாரத்துக்கு ஒரு மணியிலிருந்து 5 தடவ முழிச்சு முழிச்சு பாத்து சரியா நாலு மணிக்கு தூங்கி போயிருவேன். படுத்தவுடன் தூங்கும் சில நண்பர்களைப் பார்க்கும் போது பொறமையாகத்தான் இருக்கும். துபாயில் இருந்த நாட்களில் சக்தி FM ஐ காதிற்குள் நுழைத்தபடியே தூங்கி போயிருக்கிறேன்.

அதே போல தூங்கியே துன்பப்படுபவர்களும் உண்டு. பள்ளிகாலத்தில் ஜெயக்குமார் என்ற தோழன் எப்போதும் உட்காந்து கொண்டே தூங்குவான், அவனை தூங்கு மூஞ்சி என்றே அப்போது கூப்பிடுவோம். அவன் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையென்றால் எதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும், உட்காரச்சொல்லி பேசாமல் இருக்கச்சொன்னால் இரண்டு நிமிடத்தில் தூங்கிவிடுவான். தூக்கமென்றால் ஆழ்ந்த தூக்கமல்ல, எங்க ஊர் பக்கம் அதை கோழித்தூக்கம் என்பர், தூங்கிக் கொண்டே தலை கவிழ்ந்து பின் சடக்கென்று நிமிர்ந்து திருதிருப்பர். பாடம் நடத்துகையில் அவனை பக்கத்தில் இருப்பவர்கள் தொடையில் அடிக்கடி தட்டிக்கொன்டு இருப்பர்.அவனை ஆசிரியர்கள் எவ்வளவோ அடித்தும் அவன் தூங்குவதை மட்டும் விடவில்லை. ஒரிமுறை அவன் தூங்கிக் கொண்டு ஆசிரியரின் காலில் முட்டியிருக்கிறான் (அவன் தூங்குவானென தெரிந்துதான் ஆசிரியர் அவனை அருகில் வந்து அமர்ந்து கவனிக்கச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் சத்ததையும் மீறி அவன் தூங்கி விழுவான்) பிறகு தான் தெரிந்தது அது ஒருவகை நோய் என மருத்துவ சான்றிதழ் கொண்டுவந்து அவனுடைய அப்பா பள்ளியில் கொடுத்தார். அதன் பின்பு ஆசிரியர்கள் அவனை அடிப்பதை விட்டனர். பக்கத்தில் இருப்பவனுக்கு வேலை வந்தது, அவனை தட்டி எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே போலத்தான் எங்க பாட்டி காலை நீட்டி உக்காந்து கொண்டே தூங்குவார். எங்க 'அம்மா உக்காந்துகிட்டே தூங்கினா வீட்டுக்கு ஆகாது போய் படுத்து தூங்குங்க'னு சொன்னா பாட்டிக்கு கோவம் வந்துரும். 'நா என்ன இழுத்துக்கிட்டா கெடக்கேன், போய் படுக்குறதுக்கு, நா ஒண்ணும் தூங்கல..' அப்படினு சொல்லிக்கிட்டே 2 நிமிசத்தில் தூங்கி விழுவார். கடைசி நாள்வரை பாட்டி ஒத்துக் கொண்டதே இல்லை தான் உக்காந்து கொண்டே தூங்குவதை, அதே போல் பகல் பொழுதில் உடல் நிலைசரியில்லை என்றால் கூட படுத்து நான் பார்த்ததும் இல்லை. பாட்டியை பொருத்தவரை வேலையிருக்கோ இல்லையோ எல்லாரும் தூங்கியபின் தான் தூங்கி, எல்லாருக்கும் முன் எழுந்து விடுவார். இப்போ எங்க அம்மா காலம், காலையில் பேப்பர் படித்துக் கொண்டோ, வாரமலர் படித்துகொண்டோ அப்படியே தூங்கிவிடுகிறார். ஆனால் TV பார்த்துக் கொண்டே தூங்குவது இல்லை. அது அப்பா, செய்தி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவார், அவர் தூங்கிட்டாரேனு நாம சேனல் மாத்தினால் முழித்துவிடுவார், 'ஏண்டா செய்திய மாத்துற, கேட்கணுமில'னு கத்துவார்.

இப்படி தூங்குபவர்கள் ஒருபுறமிருந்தாலும், என்னைப் போல படுத்ததும் தூக்கம் வராதவர்கள் என்ன செய்வது? அந்த நேரங்களில் இளைய ராஜாவை காதிற்குள் இசைக்கச் சொல்லி கேட்பது ஒரு தனிசுகம். மொட்டை மாடியில் தெளிந்த வானம் பார்த்து தூக்கம் வராமல் படுத்திருப்பதும் ஒரு சுகம். தனிமையை விரும்புபவர்கள் அதை மிகவும் ரசிக்க முடியும். கல்கி, பொன்னியின் செல்வனில் பூங்குழலி தனிமையை ரசிப்பதை அழகாக சொல்லியிருப்பார். இன்றைய வாழ்வில் தனிமை சாத்தியப்படுவது, படுத்த பின் தூங்கும் முன் இருக்கும் இடைப்பட்ட நேரம்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அன்றைய நாளை அசை போட்டவாறே அடுத்த நாளின் நடவடிக்கைகளை வரிசைப்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

"...

இரையும் சந்தை
அலறும் ரயில்
பதறும் வாகனம்
உயிர்வாங்கும் ஒலிவாங்கி
விஞ்ஞானப் பொய்சொல்லும் விளம்பரங்கள்..

அத்தனை லெளகீக சப்தங்களும்
சிறுகச் சிறுகத் தேய்ந்தடங்க
கேளாத சப்தங்கள்
கேட்குமிந்த இரவில்

பூமிக்குள் வேர்கள்
நீர்குடிக்கும் ஒலியும்
பிறைநிலா வளரும் மெல்லிய ஓசையும்
நிழல்கள் அசையும் நிசப்த சத்தமும்
இன்றுதான் கேட்கிறேன்
முதன் முதலாக

..."

- வைரமுத்து
(ஒரு தூக்குக் கைதியின்
கடைசி இரவு)

.

Saturday, June 20, 2009

மாம்பழத்து வண்டு

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே என்ன பதிவு போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ அறையில் நண்பன் வாங்கிவந்த மாம்பழம் 'எனக்கென்ன குறைச்சல் என்ன பத்தி போடக்கூடாதா'னு கோவத்துல ஒரு ஓரத்தில சிவந்து சொன்னது. நிஜமாத்தானா! மாம்பழம் பேசுதானு யோசிச்சா!?

'ஏன் பேசக்கூடாதா.. நேத்து வந்த கணினி கூட நீ பேசிட்டு இருக்குறப்போ.. மழை தோன்றி மனிதன் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மாம்பழம் நான் பேசக் கூடாதா..'னு சத்தம். சொன்னா நம்ப மாட்டீங்க. சத்தம் போட்டுகிட்டே அலமாரில இருந்து கீழ விழுந்து உருண்டு வந்து கணினி பக்கத்துல உக்காந்துருச்சு.

'மாம்பழம் தமிழர்களோட முக்கனில முதல்கனி. உன்னப் பத்தி பதிவு போடாம வேறென்ன பணி'னு ஆரம்பிச்சுட்டேன்.

'நீ பதிவு போட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல. இந்திய அரசாங்கம் 'தமிழ செம்மொழி'னு அறிவிச்ச மாதிரிதான். உனக்கு வேணா அதனால பெருமையா இருக்கலாம், பின்னாடியே கன்னடம், தெலுங்கு எல்லாம் செம்மொழினு அறிவிச்ச மாதிரி நீயும் வாழப்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம்னு பதிவப் போடுவ'-இது மாம்பழம்தான்.

என்ன எகத்தாளம்! அட மாம்பழமே, தமிழ செம்மொழியாக்கின தலைவருக்கு ஓட்டு போட்ட மாதிரி உன் பதிவுக்கு எனக்கு யாரவது ரெண்டுபேரு ஓட்டு போடமாட்டங்களா?

'போட்டுட்டாலும் அத நீ வாங்கிட்டாலும்.. கார்க்கி மாதிரி 2 லட்சம் ஹிட்ஸ் வாங்கப் போறியா? இல்ல.. வெங்கி மாதிரி சங்கமம் போட்டில முதல் பரிச வாங்கப் போறியா? ஒரு மண்ணும் இல்ல. இருந்த ஒரு பிளாக்கையும் தொலச்சதுதான் மிச்சம்'-சந்தேகமென்ன இது மாம்பழம் சொன்னதுதான்.

என்னடா இது, ஆப்பிள்னு கூட ஒரு கணினி நிறுவனம் இருக்கு; மாம்பழம்னு ச்சி.. mangoனு எதுமில்லையே.. இம்புட்டு அறிவு இதுக்கு எப்படினு யோசிக்குறதுக்குல்ல.. யோசிக்கவிடுதா அது..

'என்ன இந்த கவிஞர்கள் படுத்துறபாடு போதாதுனு நீ வேற பதிவு போட்டு படுத்த போறியா'

'அட மொழு மொழு மாம்பழமே உன்ன கவிஞர்கள் காதலோட பாடுறாங்க அது பிடிக்கலயா'

எவன்யா காதலோடு பாடுறான்? எல்லாரும் காமத்தோட தான் பாடுறாங்க.
மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்னு ஒரு பாட்டு..
தென்னந்தோப்புல நின்னுட்டு இருந்தாலும் 'மாந்தோப்பில் நின்றிருந்தே'னு ஒரு பாட்டு..
ரெண்டயும் விட்டா நான் மார்க்கெட்டுக்கு போகாம இருக்குறத பத்தி பாடுறது..
எதுமே இல்லட்டா என்ன தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுறது..
நான் கேட்டேனாயா உங்ககிட்ட..

பேசு மாம்பழமே பேசு.. 'கககபோ' கட்சியின் சின்னமாய் இருந்துக்கிட்டு நீ இதுகூட பேசலனா எப்படி? விட்டா சிகரெட் பிடிச்சுட்டு மாம்பழம் தின்னுறாங்க மகாபாவிகள்னு சொல்லுவ போலயிருக்கே..

சொன்னாத்தான் என்ன தப்பு? அவ்வளவு ஏன்.. நீ என்னைக்காவது என்ன காதலோட வேணாம்.. பழமா பாத்துருக்கியா.. காமப்பார்வதான் பாக்குற..

போதும் போதும் நிறுத்து.. என் பிளாக்குன்னு ஒரு வரையறை இருக்கு.. அதுக்குமேல போடமுடியாது..

அதான் தெரியுமே உன் யோக்கியத.. சில்லறைத் தேடல் பதிவ படிச்சப்பவே..

அடக்கடவுளே! இது வேறயா.. சரி சரி ஒரு சமாதானத்துக்கு வருவோம்.. நான் உன்னப் பத்தி உயர்வா ஒரு பதிவு போடுறேன்.. ஆனா ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும்..

அதான; உனக்கு கேட்கத்தான தெரியும்.. நீ என்னைக்கு பதில் சொல்லியிருக்க. பயப்படாம கேளு..

அட வண்டு குடைஞ்ச மண்டு மாம்பழமே! சில்லறைத்தேடல தேடிப் படிச்ச நீ 32 கேள்வி பதில்கள படிக்கலயா? சரி விடு.. திருவிளையாடல் படத்துல ஞானப்பழம்னு உன்னத்தான் காட்டுவாங்க.. நீ தான் ஞானப்பழமா?

இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்ல..அடுத்து என்ன கேட்பனு எனக்கு தெரியும்.. ஞானப்பழத்துக்கு கொட்டையிருக்கானு கேட்ப..உன்ன சொல்லி குத்தமில்ல.. எல்லாம் தமிழ் சினிமாவச் சொல்லணும்..

தகப்பன குத்தஞ்சொன்னாலும் பொறுத்துக்கலாம்.. தமிழ் சினிமாவ குத்தம் சொன்னா பொறுக்குமா தமிழ் மரபு? பொங்கியெழுறதுதான தமிழர் சம்பிரதாயம்.. பொங்கியெழுந்துட்டேன்.. அதாங்க மாம்பழத்த சாப்பிட்டுட்டேன்..

சாப்பிட்ட பிறகுதான்.. மனசுக்குள்ள சின்னதா ஒரு கேள்வி உறுத்திக்கிட்டே இருந்தது.. அதான் இப்போ கேட்குறதுக்கு மாம்பழம் இல்லையே.. உங்க கிட்டயே கேட்டுடுறேன்..

கொட்டையில்லா திராட்சை மாதிரி கொட்டையில்லா மாம்பழம் எங்க பாஸ் கிடைக்கும்?

'எங்க கிடைச்சாலும் நீ சொந்தமா காசு போட்டு வாங்கி திங்க போறதில்ல.. ஓசி மாம்பழத்துக்கு ஒரு பதிவா?' - இது வயித்துக்குள்ள போன மாம்பழத்தோட வாய்ஸ் இல்லீங்க; மாம்பழம் வாங்கிட்டு வந்த நண்பன்.

.

Friday, June 12, 2009

சில்லறைத் தேடல்கள்

தொலைக்காட்சி
அலைவரிசைகளை
அலசும் துரத்தலில்..

இணைய அரட்டையின்
தட்டச்சில் உணர்விறக்கி
அவசரமாய் துடைத்தெறியும்
உறவு கதகதப்பில்..

புரட்டும் பக்கங்களில்
தேக்கிய ஆசைகளை
நீர்த்துவிடும் பாவனையில்..

கோவில் சிற்பங்களில்
திருநீறை தட்டிவிட்டு
விரைந்தோடும் பார்வையால்
விடைதேடி தாவுகையில்..

ஓடும்பேருந்தில்
சிறிதாய் பெரிதாய்
அழுத்தமுமாய்
உறுத்தும் உரசலில்..

சாலையில்,வாகனத்தில்
கடற்கரையில்,பூங்காவில்
கடக்கும் இணைகளை
தடவும் பெருமூச்சில்..

இன்னும்
ஆறுமாதமோ ஒருவருடமோ
முடிந்துவிடும்
இந்த சில்லறைத்தேடல்கள்
சில்லறைத்தட்டுப்பாடு
தீரும்போது..
இல்லாவிடில்
எனக்கான சில்லறை
உன்னால் தேடப்படும் போது..

..

Tuesday, June 9, 2009

முற்றுப்பெறாத கேள்விகள்

இலங்கை தமிழர்களின் மீது இந்தியாவுக்கு அக்கறையிருப்பதாகவும் அவர்களது நல்வாழ்விற்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் 1000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் புனரமைப்பிற்காக நிதி வழங்குவது அவசியமான ஒன்றுதான். ஆனால் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்பது எவ்வகையில் உறுதி செய்யப்படுமென்று தெரியவில்லை. அந்த 1000 கோடிப் பணம் பயன்படுத்தப்படுவதை இந்தியா எதேனும் குழு அமைத்து கண்காணிக்குமா அல்லது 1000 கோடிக்கு இரண்டு தவணையாக இலங்கைக்கு காசோலை அனுப்பி விட்டு பாரத பிரதமரும், தமிழகத் தலைவரும் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை பங்கிட்டுகொள்வார்களா எனத் தெரியவில்லை. 1000 கோடிப்பணம் கொடுக்கப்படும்போது நமது மேற்பார்வையின் கீழ் மட்டுமே அவை செலவழிக்கப்பட வேண்டுமென்று கேட்க இந்தியாவிற்கு உரிமையிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, கிடைக்கும் நிதியை தமிழ் மக்களின் புனரமைப்பிற்கு பயன்படுத்துவார்கள் என்பது நம்பமுடியாத விசயம். அதே போல சில தமிழக எம்.பி களும், இங்குள்ள ஈழதமிழ் ஆதரவாளர்களும் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களின் பகுதிகளை பார்வையிடலாம். அதையெல்லாம் விட இங்குள்ள இலங்கை அகதிகளின் முகாம்களுக்கு சென்று அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஏதாவது வழிபிறக்கும். (எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்: புலம் பெயர்ந்து மற்ற நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் போராடுகிறார்கள். போராட்டங்களுக்கு தார்மீக மற்றும் பண உதவி செய்கிறார்கள். இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை அகதிகளின் நிலை என்ன? அவர்கள் குரல் கொடுக்க இந்திய இறையாண்மையில் இடமில்லையா? அல்லது அவர்கள் இலங்கையை மறந்து விட்டர்களா?)

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"

குறள் விளக்கம்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே நாம் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

தேர்தல்நேர திடீர் ஈழஆதரவாளர்கள் இப்பொது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதென இலங்கை அரசு அறிவித்தவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரும் மாண்டுவிட்டார்களென தலைமுழுகி விட்டார்களா? ஈழமக்களின் எதிர்கால வாழ்வில் நமக்கு அக்கறையில்லையா? ஈழமக்களின் இளைய தலைமுறையை நாம் புறக்கணிக்கலாமா? வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்? தலையில் முள் கிரீடம் ஏதுமில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தும் அளவிற்கு பேச விடுதலைப்புலிகளும் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக திருமா,வைகோ,ராமதாஸ் போன்றவர்கள் தைரியமாகப் பேசி மத்தியில் இருக்கும் வடஇந்திய எம்.பிகளிடம் ஈழமக்களுக்கான ஆதரவைத் திரட்டலாமே. ஏன் தமிழக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும். வட இந்திய ஊடகங்களும் மக்களும் தமிழர்களுக்கு எதிராக இருப்பதால் தானே விடுதலைப் புலிகளுடனான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அருந்ததிராய், மேதா பட்கர், இப்போதைய சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களின் ஈழமக்கள் ஆதரவை நாம் முறையாக பயன்படுத்தவில்லை.

ஈழ ஆதரவாளர்கள் இன்றைய ஈழமக்களின் எதிர்கால வாழ்வை முன்னிட்டு என்ன செய்யப் போகிறார்கள் அல்லது இவர்கள் எண்ணமெல்லாம் தமிழக மக்களை உணர்ச்சிவசப்பட செய்து அதில் பலன் பெறுவது மட்டும் தானோ என நினைக்கத் தோன்றுகிறது. நமது பத்திரிகைகளும் நயன்தாராவின் ரகசிய திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஈழ விவகாரம் போனியாகாதென்பது தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு கொடுத்த பாடமாக இருக்கக்கூடும். பதிவர்கள் கூட பலர் மறந்து விட்டார்கள். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று இருந்தால் நாம் தமிழின் பெருமை தமிழனின் வீரம் குறித்து சிலாகித்து கொண்டிருந்திருப்போம். இப்போது அதைப்பற்றி பேச விரும்பவில்லை. உண்மையான ஈழ ஆதரவாளர்களின் நிலைதான் பரிதாபகரமானது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே உள்ளூர் தேசியவாதிகளிடம் வாங்கிக் கட்டி கொண்டாகி விட்டது. இப்போது புலம்பெயர்ந்த ஈழமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து"

குறள் விளக்கம்: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்க கூடியதாக இருப்பின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

.

Tuesday, June 2, 2009

ஹைய்யோ!!!


கொஞ்ச
நாள் முன்னால சுஜாதாவின் ' கணையாழியின் கடைசி பக்கங்கள்' புத்தகத்தை படித்தேன். படிச்ச பிறகு தூக்கமே வரல.. என்னடான்னு பாதி தூக்கத்துல எந்திச்சு பாத்தா என்னென்னவோ தோணுது. சரி அதையே எழுத ஆரம்பிச்சுட்டேன், ஏதோ எழுதுனத வச்சு பிளாக்குல போடலாம்னு பாத்தா மறுநா பிளாக்கையே காணோம்.. கடவுளுக்கே பொறுக்கலனு அத தூக்கி போட்டுட்டேன்.

அத அப்படியே விட்டுட முடியுதா.. அதான் இப்போ புது பிளாக் ஆரம்பிச்சாச்சே..
இந்த பிளாக்குல போட்டுட்டேன்.. திட்டுறவுங்க எல்லாம் சுஜாதாவ திட்டிக்கோங்க...

******************************
++++++++++++++++++++++++


இறக்கைகளிருந்தும்
இயங்கிக்கொண்டிருந்தும்
பறக்க முடியாத மின்விசிறி

**********^^^^^^^^***********

வேலி தாண்டிய நிழல்
வெட்டப்பட்ட கிளை
எங்கள் வீட்டு வேப்பமரம்

**********^^^^^^^^***********

பறக்கும் காகிதம்
உதிராத எழுத்துக்கள்
உன் நினைவுகள்

***********^^^^^^^^**********

புழுதி பறக்கும் சாலை
புறப்பட்டு விட்ட பேருந்து
காத்திருக்கும் கால்கள்

**********^^^^^^^^^**********

..